ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி, 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான நீல மாணிக்கக்கல், தங்கப் பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 9 பேர் நேற்று (29) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் 10ஆம் திகதி லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பொலிஸ் பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம், 7 பவுண் தங்கம் மற்றும் 2 பொம்மை கைத்துப்பாக்கிகள், கத்தி மற்றும் வேன் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் தேரர் ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் வத்தேகம, சபுகஸ்கந்த, பொல்பித்திகம, குருநாகல், இரத்தினபுரி மற்றும் வில்கமுவ ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.