ஊடகங்களை ஒடுக்குவதற்கு எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை- அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்

 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருபோதும் ஊடக ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கவில்லை. அதற்கான தேவையும் எமக்கு இல்லை. ஒழுக்க கோவைகளுக்கு அமைய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (6) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஊடக ஒடுக்குமுறைகளைப் பயன்படுத்தவில்லை. ஊடகவியலாளர்களுக்கு இடையூறு விளைவிக்கவுமில்லை. அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பணிகளையே பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமையை நிறைவேற்றியமையை ஊடக ஒடுக்குமுறையென திரிபுபடுத்த வேண்டாம். கடந்த காலங்களில் பிரதமருக்கு அருகில் செல்வதற்கு கூட இடமளிக்கவில்லை. ஆனால் தற்போது அந்த மாற்றத்தை தெளிவாகக் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

எனவே சிறிய விடயங்களை பெரிதுபடுத்த வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம். ஊடகங்களை ஒடுக்குவதற்கு எந்தவொரு தேவையும் எமக்கு இல்லை. எனவே ஊடகங்களும் அவற்றின் ஒழுக்க கோவைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என்பதைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.