கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி நான், மெய்ப்பாதுகாவலர்களை குறைக்கவேண்டாம் பாதுகாப்பு அமைச்சுக்கு சந்திரிகா கடிதம் .

 


அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி, ஒக்டோபர் 31ஆம் திகதி வழங்கிய குறித்த கடிதத்தில், தனது மெய்ப்பாதுகாவலர்களின்  எண்ணிக்கையை 50ல் இருந்து 30 ஆக குறைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முறையே 243 மற்றும் 200 மற்றும் 109 நபர்களை கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த அளவுகோலின்படி தனக்கு மட்டும் 30 மெய்ப்பாதுகாவலர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது தனக்கு புதிராகவே இருப்பதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தாம் தான் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவர் எனவும், கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.