தனித்துவத்தை இழக்காத சமத்துவத்திற்கான குரலாக இருக்கக்கூடிய பிரதிநிதியினைத் சிறுபான்மையினர் தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தப்பாடானதாகவிருக்கும்.

 

Dr.T.Pratheepan



 

இலஞ்சம் இல்லாத நாடு,  ஊழல் இல்லாத நாடு, சமத்துவமான நாடு, பக்கச் சார்பில்லாத நாடு என்ற விடயங்கள் ஒரு நாட்டின் அடிப்படை. ஒரு நாட்டின் எழுச்சிக்கான பாதையில் இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவை.  அதற்காகத்தான் ஏதோ முடியுமான வரையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமாரவின் வெற்றிக்கான பயணத்தில் நாம் கைகோர்த்திருந்தோம். அது நமது கடமையாகவும் இருந்தது. மாற்றத்திற்கான பயணத்தை தொடங்குவதற்கு நமது பங்களிப்பும் இருந்தது என்ற ஓர் பூரிப்பு.

ஆனால், இப்போது சற்று கவனமாகவும் நிதானமாகவும் அவதானிப்புடனும் நடந்து கொள்ளவேண்டிய நிலைப்பாட்டினை எடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு நாம் அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம்.

 உண்மையானதும் யதார்த்தமானதுமான நிலைப்பாடு என்னவென்பதை ஆழமாக அறியாது, சூழ்நிலையினை அவதானித்தானிக்காது, கண்ணை மூடிக்கொண்டு கையாள்வதும், மக்களை வழிப்படுத்துவதும் சிலவேளைகளில் பாதாளத்தில் எம் சமூகத்தை மூழ்கடிப்பதற்குச் சமனாகக்கூட இருக்கலாம் என்ற பயம் உள்ளது.

 சூழ்நிலைகள் எவ்வாறு இருக்கின்றன, எவ்வாறு இருக்கப் போகின்றன என்பதை படிப்படியாக அவதானிப்பதும் அதற்கேற்றாற்போல் நடப்பதும் காலத்தின் தேவையாகவுள்ளது.

ஜனாதிபதியின் சிந்தனை மற்றும் செயற்பாடுகளை வலுப்பெறச் செய்ய ஊழலில்லாத நேர்மையானவரும், அறத்துடன் கூடிய ஆளுமையுள்ளவரும், அறத்துடன் கூடிய அறிவுள்ளவரும், அறத்துடன்கூடிய திறமையுள்ளவரும், சமத்துவம் அமுலாக்கப்படுகின்றபோது தனித்துவத்தை இழக்காத சமத்துவத்திற்கான குரலாக இருக்கக்கூடிய வருமான தரமான பிரதிநிதியினைத் தெரிவுசெய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தற்போதைய சூழலில் மிகவும் பொருத்தப்பாடானதாகவிருக்கும். அதனைச் சிந்திக்கவேண்டிய தேவை எமக்குள்ளது. குறிப்பாக  சிறுபான்மையினர் இதில் கூடுதல் அவதானத்துடன் செயற்படவேண்டும்.

சமத்துவம் பேணும் அரசாங்கத்தில் அனைத்தும் பக்கச்சார்பின்றி நடக்கும் என்பதால் அது அரசாங்க கட்சியாகத்தான்  இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. சமத்துவம் எமக்கு வேண்டும் ஆனால் தனித்துவத்தை இழக்காத சமத்துவத்தை நாம் கொண்டிருக்க வேண்டும்.  சமத்துவமெனும் சமுத்திரத்துள் தனித்துவத்தை இழக்காது இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆக, படிப்படியான நிலை மாற்றம் நமக்கு பலவகையிலும் ஆரோக்கியமானதாகவிருக்கும்.