பிரமிட் வகை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்யப்பட்ட 1,800 மில்லியன்
ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றும் அவரது மனைவி
ஆகியோரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு
நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், சந்தேகநபர்
மலேசியாவில் தலைமறைவாக இருந்து இலங்கை வந்த போது கட்டுநாயக்க விமான
நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை அழைத்துச் செல்வதற்காக அவரது மனைவி கட்டுநாயக்க விமான
நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொண்டு வரும் நிலையில்,
சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை
பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.