15 வயது சிறுமி துஷ்பிரயோகம் , சந்தேக நபருக்கு 30 வருட சிறை .

 

 

 


 

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட, திருகோணமலை மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் புதனன்று(11) தீர்ப்பு வழங்கியது.

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது விசாரணைகள் முடிவுற்று புதனன்று(11) தீர்ப்பு வழங்கப்பட்டபோதே மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா குற்றவாளிக்கு 30 வருட சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு தீர்ப்பு வழங்கியிருந்தார். 

இவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் சார்பாக அரச சட்டத்தரணி நசிகேசன் முன்னிலையாகி இருந்தார்.

சம்பூர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரினால் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம்  திகதியில் இருந்து மே மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த சிறுமி மூன்று முறை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் ஒருமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக 10 வருடங்கள் சிறை தண்டனை என்ற அடிப்படையில் 30 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டஈடாக ஒரு குற்றத்திற்காக தலா ஒரு இலட்சம் வீதம் மூன்று இலட்சம் ரூபாய் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்தகைய தீர்ப்புகள் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் குற்றங்களை குறைப்பதற்கு உதவும்.இதுபோன்ற கடுமையான தண்டனையை திருகோணமலை நீதிமன்றில் மிக நீண்ட காலத்திற்கு பின்னர்  வழங்கப்பட்டுள்ளது. தண்டனைகள் அதிகரிக்கும் போது தான் குற்றங்கள் குறையும்.எனவே இதுபோன்ற தீர்ப்புகளை வரவேற்பதாக இத் தீர்ப்பு தொடர்பில் சமூக நலன் விரும்பிகள் கருத்து தெரிவித்தனர்.