2025ஆம் ஆண்டு தைப் பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு புத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் கொண்டாட்டத்தை 2025 ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பல வேலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது.
இதில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் இதர அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதனிடையே, இந்தியாவில் நடைபெறும் சபரிமலை யாத்திரையில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவான இந்து பக்தர்களை கலந்துகொள்ளவும், அதற்கு அரச அதிகாரபூர்வ அந்தஸ்து பெறவும் இந்து சமய கலாசார திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.