பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும்- மக்கள் போராட்ட முன்னணி

 


தற்போதைய அரசாங்கம் இரத்தத்தாலும் இரும்பினாலும் நசுக்கப்பட்ட வரலாற்று அனுபவத்தை நினைவுகூர்ந்து பாராளுமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்தை விரைவில் இரத்துச்செய்யவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது.

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியான அறிக்கைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் ரத்துச் செய்யப்பட வேண்டிய அடக்குமுறைச் சட்டமான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 01 ஆகிய திகதிகளில் பொலிஸார் நான்கு பேரைக் கைது செய்ததோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்.

 ஆனால் அந்த நபர்கள் மீது பொதுச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் மிகக் குறுகிய காலத்திற்குள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களைக் கைது செய்து தடுத்து வைப்பது இது இரண்டாவது தடவையாகும். முன்னதாக அறுகம் குடா சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலான தகவல்களை பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடக அறிக்கையிலும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் முன்வைத்தது.

2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி பொலிஸாரின் ஊடக அறிக்கையில் ‘புலிகளின் மாவீரர் தினப் பிரச்சாரத்தை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த மூன்று சந்தேகநபர்கள் கைது’ என்ற தலைப்பில் குறித்த கைது தொடர்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.