மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

 

 



 

மட்டக்களப்பு மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் மட்டக்களப்பு செயலகத்தின் அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைருமான அருண் ஹேமசந்திர அவர்களது தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஐஸ்டினா முரளிதரன் அவர்களது ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்து குழு கூட்டத்திற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழா, முஹம்மட் சாலி நளீம் ஆகியோர் கலந்து கொண்டு தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.

இதன் போது விசேடமாக கடந்த ஒரு சில தினங்களாக பெய்த மழை காரணமாக அதிகமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில்  தங்கவைக்கப்பட்டிருந்தமையினால் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள், மற்றும் சேத விபரங்களை மதிப்பீடு செய்வதன் முக்கியத்துவம் போன்ற விடையங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. 

அது மட்டுமல்லாது இனி வரும் காலங்களில் ஏதேனும் அனர்த்தங்கள் ஏற்படின் அதற்கான முன்னாயத்த தயார்படுத்தல்களை எவ்வாறாக  மாவட்ட மட்டத்தில்  முன்னெடுக்க வேண்டும் என இதன் போது மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டதுடன், மாவட்டத்தில்    அனர்த்தங்கள் ஏற்படக் காரணமாக திகழ்ந்து வரும் விடையங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்டது. 

விசேடமாக செங்கலடி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் அதிகமானோர் ஈடுபடுவதனால் வயல் நிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, தற்காலிகமாக குறித்த பகுதிக்கான மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான தீர்மானம் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரினால் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன், விவசாய பாதிப்பிற்கான நஸ்ட ஈடு வழங்குதல், போக்குவரத்து, கல்வி மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெலுவதற்கு தேவையான ஏனைய விடையங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷனி ஶ்ரீகாந்த்,  நவரூபரஞ்சனி முகுந்தன் (காணி), மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், பிர தேச செயலாளர்கள், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், ஆணையாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், பிராந்திய சுகாதார சேவைகள்  அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மீன் பிடி, விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.