தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- சாணக்கியன் இராசமாணிக்கம்

 


பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“நாட்டில் சமத்துவம் என்பது மிகவும் முக்கியமானது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனாலும், ஜனாதிபதி அண்மையில் ஆற்றிய அக்கிராசன உரையில் தமிழ் மக்களுக்கு மட்டும் உரித்தான சில பிரச்சினைகள் பற்றி பேசியிருக்கவில்லை.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதான கட்சி என்ற அங்கிகாரம் இலங்கை தமிழரசு கட்சிக்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், இந்த விடயங்களை நான் கவனத்திற்குகொண்டு வருகின்றறேன்.

அந்த வகையில் பல அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசியல் நோக்கத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடிய இந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் மீது தற்போது பல்வேறு வழங்கு பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் தற்போது அந்தச் சட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.