20 வது சுனாமி ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடம்பெற்றது.
அதனை முன்னிட்டு கல்லடி திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த நினைவாலயத்தில் 8.55 மணியலவில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
2004.12.26ம் திகதி கடல் நீராய் வந்து கண்ணீராய் உருமாரி கல்லடி திருச்செந்தூரில் 243 உயிர்கள் ஆழிப்பேரலையினால் காவு கொள்ளப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் நிறைவாகிறது.
இதனையொட்டி திருச்செந்தூர் சுனாமி ஞாபகார்த்த தூபி நிர்மானிப்புக்குழுவின் ஏற்பாட்டில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அத்தோடு டச்பார், புதுமுகத்துவாரம் மற்றும் நாவலடி பகுதிகளில் நிர்மானிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வுகளில் வணபிதா ஜோசப் மேரி அடிகளார் , வணபிதா ஜெகதாஸ் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபு கந்தசாமி , ஸ்ரீநேசன் ஸ்ரீநாத் , உள்ளிட்ட மதத்தலைவர்களும் சுனாமியினால் உயிர்நீத்தவர்களின் உறவினர்கள் என பலரும் பங்கேற்றனர்.
உயிர் இழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு வணபிதா ஜோசப் மேரி அடிகளார் , வணபிதா ஜெகதாஸ் ஆண்டகையினால் பிரதான தீபச்சுடர் ஏற்றப்பட்டு பிரார்த்தனைகளும் இடம்பெற்றது.
மேலும் புதிய கோட்டமுனை விளையாட்டு கழகத்தினால் இரத்ததான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
மற்றும் மாவட்டத்தின் வாகரை தொடக்கம் துறைநீலாவனை வரையிலான சுனாமியினால் பாதிப்பிற்குள்ளான அனைத்து கிராமங்களிலும் நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.