தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் இளைஞருக்கு ஆதரவு கரம் நீட்டிய நாமல் .

 


தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். 

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழகத்தில் தஞ்சமடைந்த ஒருவர், தம்மை மீண்டும் இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணொளி ஒன்றைத் தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 

தமக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது தம்மை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறித்த நபர் வலியுறுத்தியுள்ளார். 

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமல் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், குறித்த நபரை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.