19.01.1909 - அமரர்களான கதிர்காமத்தம்பி உடையார், சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோருக்கு சொந்தமான 77பேர்ச் விஸ்திரணமுள்ள காணியில் விவேகானந்தா சுதேச சைவப்பாடசாலை என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது.
19.01.1912 சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுத்துச் சென்ற சகோதரி. அவபாமியா அம்மையார் அவர்களை ஸ்தாபகர்கள் அழைத்து வந்து நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல்லை நடவைத்தனர்.
04.07.1912- திருவாளர்களான K.O வேலுப்பிள்ளை, க.அம்பிகை பாகபிள்ளை, சீ.குமரையா, தோ.கு. சின்னத்தம்பி ஆகிய நால்வரை நம்பிக்கைக்காரர்களாக நியமித்து, 5000/= ரூபாய்களை கதிர்காமத்தம்பி உடையார் மற்றும் சபாபதிப்பிள்ளை உடையார் ஆகியோர் விவேகானந்தா சுதேச சைவப் பாடசாலையின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு K.C.V.K கம்பனியில் வைப்பிலிட்டனர். (ஆதாரம் பதிவு இல 101- திகதி 1912.07.24 volume - B-113/176,177 சாசன இல 2809)
1918 K.O வேலுப்பிள்ளை அவர்கள் முகாமையாளராக பாடசாலையை பொறுப்பேற்றார் (ஸ்தாபகர்களின் மறைவுக்கு பின்)
1918 திருவாளர்களான தோ.சி. செல்லத்துரை, சீ.குமரையா, தோ.கு.சின்னத்தம்பி, நொ.க. நல்லதம்பி, க.அம்பிகைப்பாகப்பிள்ளை ஆகியோர் அடங்கிய நிரவாகக்குழு பாடசாலையை நிர்வகிப்பதற்கு முகாமையாளரால் நியமிக்கப்பட்டது.
1924 மாணவர் அதிகரிப்பு காரணமாக K.O வேலுப்பிள்ளை அவர்கள் கட்டிட வசதி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தார்.
1925 பாடசாலை முகாமையாளர் தலைமையில் சுவாமி விபுலானந்தரை கல்லடி பிரதேசத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கச் சென்ற குழுவில் நமது பாடசாலை நிருவாக குழுவும் இணைந்து கொண்டது.
10.04.1925 பாடசாலை ஆரம்ப கட்டிட முன்பாக, பேச்சியம்மன் மைதானத்தில் சுவாமி. விபுலானந்தர் வரவேற்கப்படுகிறார். இந்து ஆண்கள் ஆங்கில பாடசாலை ஸ்தாபிப்பு பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோது, நமது பாடசாலையின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு ஸ்தாபகர்களால் வைப்பிலிடப்பட்டிருந்த 5000/= ரூபாய்களையும், நமது சகோதர பாடசாலையின் அபிவிருத்திக்காக வழங்கி உதவுவதாக K.O வேலுப்பிள்ளை அவர்கள் தெரிவித்தார். (உயிரோடிருந்த ஒரே ஒரு தத்துவக்காரர்)
25.04.1928 எமது பாடசாலை ஆரம்ப கட்டிடம் மற்றும் அதனோடிணைந்த நிலம் என்பனவும், ஸ்தாபகர்களால் நமது பாடசாலை வளர்ச்சிக்காக வைப்பிலிட்டிருந்த 5000/= ரூபாய்களும் ஆங்கில பாடசாலை வளர்ச்சிக்காக K.O வேலுப்பிள்ளை அவர்களால், சுவாமி விபுலானந்தர் மூலம் இராமகிருஷ்ணமிசனிடம் 2809 சாசனம் மூலம் கையளிக்கப்படுகின்றது.
01.04.1931 -இன்றைய தினம் 1918 முதல் பாடசாலை நடாத்தி வந்த நிருவாகக்குழுவினர், நிர்வாகத்தை இராமகிருஷ்ணமிஷனிடம் முழுமையாக கையளித்தனர். அன்றிலிருந்து இ.கி.மி விவேகானந்தர் பெண்கள் பாடசாலை என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.
1940 திரு.சி. கணபதிப்பிள்ளை அவர்கள் கட்டிட வசதியொன்றை ஏற்படுத்தி கொடுத்தார்.
1949 - டாக்டர். எஸ்.தம்பிப்பிள்ளை அவர்கள் கட்டிட வசதியொன்றை ஏற்படுத்தி வழங்கினார்.
1931 - 1960 இராமகிருஷ்ணமிஷன் நிருவாகத்தில் பாடசாலை இயங்கிய காலம். சுவாமி. விவேகானந்தர், சுவாமி. நடராஜானந்தர் மற்றும் பல மிஷன் துறவிகளின் ஆசியும், அர்ப்பணிப்பு நிறைந்த சேவைகளும், அதிபர்களாக கடமை புரிந்த திரு.க.வேலுப்பிள்ளை, திரு.ச.சந்திரசேகரம் வேலுப்பிள்ளை, திருமதி.வ. சாரதாதேவி, செல்வி. கண்மணி அருணாச்சலம் ஆகியோர் என்றும் நினைவுகூறப்படவேண்டியவர்கள்.
01.01.1960 - பாடசாலை அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. திருமதி. பூபதி வேலுப்பிள்ளை அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார்.
1963-1970 காலப்பகுதியில் செல்வி. கண்மணி அருணாச்சலம் அவர்கள் அதிபர் பொறுப்பில் இருந்தார்.
1970-1971 காலப்பகுதியில் திருமதி. பி. சிவானந்தராஜன் அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்றிருந்தார்.
1971-1987 - காலப்பகுதியில் திருமதி. இ. சிவபாத சுந்தரம் அவர்கள் அதிபராக கடமை புரிந்தார். இக்கால தேசிய அரசுப்பேரவை உறுப்பினர் அமரர். இராஜன் செல்வநாயகம் அவர்களின் ஒத்துழைப்புடன் 2 ஏக்கர் காணி சுவிகரிக்கப்பட்டு, முதலாவது மாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டது. மற்றும் சுவாமி விபுலானந்தர் மண்டபம், அவபாமியா மண்டபம், விஞ்ஞான மனையியல் கூடங்கள் அமைக்கப்பட்டதுடன், மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டதுடன், க.பொ.த (உயர்தர) கலைத்துறை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.
1987-1990 காலப்பகுதியில் திருமதி.கு. வேலுப்பிள்ளை அவர்கள் அதிபரானார். பாண்டு வாத்தியக்குழு, சாரணிய இயக்கம் என்பன ஆரம்பிக்கப்பட்டது.
1990-1995 - திருமதி. கு. சோமசுந்தரம் அவர்கள் அதிபரானார். இக்கால கட்டத்தில் மாகாண அமைச்சில் திட்டமிடல் அதிகாரியாக கடமையாற்றிய திரு.S.S.மனோகரன் அவர்களின் ஆதரவுடன் நிவேதிதா மண்டபம் அமைக்கப்பட்டது.
1995-1996 திருமதி. உ. நடராசா அவர்கள் அதிபர் பொறுப்பை ஏற்றார். நோராட் உதவியுடன் பழைய கல்முனை வீதி பக்கமாக அதிபர் காரியாலய கட்டிடம் அமைக்கப்பட்டதுடன், இவர் எடுத்த முன்நகர்வுகள் பாடசாலையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.
1996-2002 திரு. ச. தர்மராஜன் அவர்கள் அதிபராக கடமை புரிந்தார். ஒன்றுகூடல் மண்டபம், மூன்று மாடிக்கட்டிடம், விஞ்ஞான ஆய்வுகூடம், செயற்பாட்டு அறை, விவசாய அலகு, விடுதி அமைந்துள்ள இருமாடி கட்டிடம், புதிய கல்முனை வீதியில் இரண்டு மாடிக்கட்டிடம் என்பன அமைக்கப்பட்டதுடன், திணைக்கள பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு மாடிக்கட்டிடம் பாடசாலைக்கு உத்தியோக பற்றற்ற முறையில் பெறப்பட்டது. அத்துடன் க.பொ.த. (உயர்தர) விஞ்ஞானதுறை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலையின் அமைப்பு உயர் பார்வைக்கு மாற்றம் பெற்று, நகர்ப்புற பாடசாலைகளுடன் ஒப்பிடும் நிலைக்கு மறுமலர்ச்சி கண்டது. சுவாமி. ஆத்மகனானந்த மகராஜ், சுவாமி. ஜீவனானந்த மகராஜ் ஆகியோரின் நேரடி ஆசிகள், இக்கால நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். ஜோசப் பரராஜ சிங்கம் அவர்கள், மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு.S.S மனோகரன் ஆகியோரின் பெரும்பங்களிப்புகள், பழைய மாணவர்களின் இடையறா முயற்சிகள் என்பன மறக்கமுடியாதவை.
2002 தை 2002 - சித்திரை மிகவும் குறுகியகாலத்திற்கு திரு. ம. பிரசாத் அவர்கள் அதிபராக கடமையாற்றினார்.
2002-2011 திருமதி. இந்திராணி புஸ்பராஜா அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இவரது காலத்தில் புதிய நிர்வாக கட்டிடம் (ஜனாதிபதி நிதி ) ஒன்றுகூடல் மண்டப முகப்பு வாயில் (உதவி. திருமதி. சங்காரவேல் அவர்கள்), பிரதான முகப்பு வாயில் (உதவி. திரு.திருமதி. பாலசுப்ரமணியம்) என்பன அமைக்கப்பட்டதுடன், ஆரம்ப பிரிவு மாணவர் பாண்டு வாத்தியக்குழு ஆரம்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சிறப்புடன் இவரது சேவை அமைந்தது.
2011-2018 - திருமதி. திலகலதி ஹரிதாஸ் அவர்கள் அதிபர் பொறுப்பில் இருந்தார். திணைக்கள தேவைக்காக அமைக்கப்பட்ட இருமாடிக்கட்டிடம் உத்தியோகபூர்வமாக பெறப்பட்டது. 10 வருடங்களுக்கு மேலாக பூர்த்தி செய்யப்படாத நிலையில் இருந்த விஞ்ஞான ஆய்வுகூட மூன்றாம் மாடியும், நிருவாக கட்டிடத்தொகுதியின் இரண்டாம் மாடியும் பூர்த்தி செய்யப்பட்டது. (உதவி K.O.V விமலநாதன் அவர்கள், திரு. நெடுஞ்செழியன் அவர்கள்), மூன்று கோடி செலவில் வகுப்பறைகளின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்பட்டது. (உதவி- அமெரிக்க ராணுவ நிதியம்) விளையாட்டு துறையில் 8 வருடங்கள் தொடர்ச்சியாக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்து வந்ததும், கலை, கலாச்சார நிகழ்வுகளில் நகர்ப்புற பாடசாலைகட்டு சவால் நிலையை ஏற்படுத்தியதும், பல்கலைக்கழக அனுமதி 44 ஆக உயர்ந்து சாதனையை நிலைநாட்டியதும், விவேகானந்தா மகளிர் கல்லூரி என்று பெயர்மாற்றம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
2018-2020 திருமதி. பி.ராஜகோபால சிங்கம் அவர்கள் அதிபராக கடமையாற்றிய இக்கால கட்டத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் O/L, A/L மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கிலும் பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டது.
2020 - இன்றுவரை- திருமதி ந.தர்மசீலன் அவர்கள் அதிபர் பதவியிலிருந்து சிறப்புடன் வழிநடத்திக்கொண்டிருக்கின்றார். இக்காலத்தில் O/L மாணவர்களின் சித்தி 90 வீதத்தை எட்டி சாதனையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ சித்தி விநாயகரின் அருட்கடாட்சத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் தெய்வ ஆசியும், மிசன் துறவிகளின் ஆசியும் பெற்ற எமது பாடசாலை, அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள் நலன் விரும்பிகளின் ஆதரவுடனும், பங்களிப்புடனும் 116வது ஆண்டில் காலடி பதித்து நிற்பது பெருமையை தருகின்றது.