2025 ஆண்டு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்றில் கால் தடம்பதிக்கவிருக்கும் மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று (30) திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் அன்டன் பெனடிக் ஜோசப் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வணக்கத்துக்குரிய மட்டக்களப்பு மறைமாவட்ட குரு முதல்வர் ஜோர்ஜ் ஜீவராஜ், புனித மிக்கேல் ஆரம்ப பிரிவிற்கான உப அதிபர் வணக்கத்திற்குரிய மெருசன் கென்ரிக், கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
அதிதிகளுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலுடன் மும்மத இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இதன்போது தரம் ஐந்து மாணவர்களின் வரவேற்பு நடனம் உள்ளிட்ட ஏனைய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்ததுடன், பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளின் உரையினைத் தொடர்ந்து ஆரம்பப் பிரிவிற்கான கட்டடத் தொகுதிக்கு புதிய மாணவர்கள் பாடசாலை பாண்ட்டு வாத்திய மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்கள் தரம் இரண்டில் கல்விகற்கும் மாணவர்களால் மாலை அணிவித்து மகிழ்வுடன் வரவேற்கப்பட்டனர்.
நீண்டதொரு வரலாற்றுப் பின்ணனியை கொண்ட பல சாதனைகளை தன்னகத்தே கொண்ட புனித மிக்கேல் கல்லூரியில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவச்செல்வங்களால் இந்நாள் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவாக அவர்களது மனங்களில் நிலைத்து நிற்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் உளநல வைத்தியர் சர்வதேச நடத்தை மாற்று நிபுணர் சகாயதர்ஷினி, பிரதி அதிபர் ஆர்.எஸ்.எஸ்.ஆர் டேசி ஸ்பக்,
பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன்விரும்பிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.