ஸார்ப் நிறுவனத்தால் இதுவரை 78375 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளது .

 


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டடில் ஈடுபட்டுவரும்  ஸார்ப் நிறுவனத்தினால் எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதை தொடர்ந்து மக்களின்  மீள்குடியேற்றம், விவசாய நடவடிக்கைகள், உட்கட்டுமான நடவடிக்கைகள் என்பவற்றை துரிதப்படுத்தும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களால் சர்வதேச  நாடுகளின் நிதியுதவியுடன் உள்ளூர் பணியாளர்களை கொண்டு வெடி பொருட்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகளில்   ஸார்ப் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்க நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் ( (SHARP)    )மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2024 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின்  தச்சடம்பன், அம்பகாமம், ஒலுமடு மற்றும் மாங்குளம், கொக்காவில் பகுதிகளிலும்  கிளிநொச்சி மாவட்டத்தின்  முகமாலை, கிளாலி , இயக்கச்சி , ஆனையிறவில் மற்றும் தட்டுவன்கொட்டி ஆகிய பகுதியிலும் முப்பத்தாறு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து எண்நூற்று இருபத்தொன்பது சதுரமீற்றர் பரப்பளவில் (3657829 sqm) இருந்து எழுபத்தெட்டாயிரத்து முன்னூற்று எழுபத்தைந்து (78375) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கேப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

தொடர்ந்து குறித்த நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு,  அம்பகாமம், இமாங்குளம், இகொக்காவில்,  தட்டுவன்கொட்டி, மற்றும் ஆனையிறவிலும்  துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.