சிலோன் மீடியா போரத்தின் 5 வது ஆண்டு பூர்த்தி விழாவும், இலங்கை நிர்வாக சேவை ஆளுமைகள் மற்றும்
சிறந்த ஊடகவியலாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் நிந்தவூர் அட்டப்பளம் தோம்புக்கண்ட சுற்றுலா விடுதியில் (13) இடம்பெற்றது.
போரத்தின் தலைவர் ரியாத் ஏ மஜீட் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் பிரதம அதிதியாகவும், போக்குவரத்து நெடுச்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வி.ஜெகதீஸன் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவின்போது சிலோன் மீடியா போரத்தின் மட்டு. மாவட்ட இணைப்பாளரும், வீரகேசரி சீலாமுனை நிருபருமான திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு. துஷாரா) பாராட்டப்பட்டு அவருக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசில் போன்றவற்றை பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் வழங்கி கெளரவித்தார்.
ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் (மட்டு. துஷாரா) ஆயுள்வேதம் மற்றும் அலோபதி வைத்தியம் தொடர்பான மருத்துவ கட்டுரைகள், செய்திகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை தொடராக எழுதி வருகிறமைக்காக இந்த கெளரவம் வழங்கி வைக்கப்பட்டதும், தேசிய ரீதியாக கெளரவிக்கப்பட்ட ஒரே பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.