வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாருக்கு குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 


வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோவை கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வு திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

அண்மையில் இலங்கை – முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்ட  ரோகிங்கிய முஸ்லிம்கள், விமானப்படையின் கண்காணிப்பில் தடுத்துவைக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன.

ரோகிங்கிய  அகதிகளை நாடு கடத்துவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்களை நாடு கடத்த வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இந்தப் போராட்டத்தில் பங்குபற்றிய வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் ஜான்சன் பிரிராடோ, மியன்மாரில் பாதுகாப்பு இல்லை; தமக்கு பாதுகாப்புத் தருமாறு அடைக்கலம் கோரிய  மக்களை இலங்கை அரசாங்கம் மியன்மாரிடம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கொழும்பில் உள்ள குற்றப்புலனாய்வுத் தலைமை அலுவலகத்துக்கு வருமாறு ஜான்சன் பிரிராடோவுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.