தெஹிவளை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர், தெஹிவளையில் வசிக்கும் ஊடகவியலாளர் ஒருவரின் கணவன் என்பதோடு, முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றி வந்துள்ளார்.
தெஹிவளை வைத்திய வீதியில் வசிக்கும் 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஏ. சமரஜீவ என்ற நபர் ஜனவரி முதலாம் திகதி காலை வழமை போன்று பணிக்கு சென்றுள்ளார்.
எவ்வாறாயினும், பணி முடிந்து வீடு திரும்பாத காரணத்தினால் அவரது மனைவி ஊடகவியலாளர் ஶ்ரீயானி விஜேசிங்க தனது கணவருக்கு இரவில் தொலைபேசி அழைப்பு விடுத்த போதிலும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
எனினும், பலமுறை தொலைபேசி அழைப்பு மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு கட்டத்தில் தொலைபேசி அழைப்புக்கு பொலிஸார் பதிலளித்துள்ளனர்.
இதேவேளை, தெஹிவளை ஹில் வீதியில் (Hill Street) கார் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த சட்டத்தரணி ஒருவர் தனது வீட்டின் முன் ஒருவர் வீழ்ந்து கிடப்பதாக தெஹிவளை பொலிஸாருக்கு ஜனவரி 1 ஆம் திகதி இரவு அழைப்பு விடுத்துள்ளார்.
இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
எவ்வாறாயினும், அந்த இடத்தில் விழுந்து கிடந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், பொலிஸ் அதிகாரிகள் குழு பிறகு அந்த இடத்திற்குத் திரும்புவதாகக் கூறிவிட்டுச் சென்றதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பின்னர், சம்பந்தப்பட்ட சட்டத்தரணி இது குறித்து மீண்டும் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மற்றொரு பொலிஸ் அதிகாரிகள் குழு 1990 அம்பியூலன்ஸ் சேவையை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, கீழே விழுந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று களுபோவில போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது, இறந்தவரின் முதுகில் பலத்த காயங்களும், தலையில் பலத்த இரத்தக்கசிவும் இருந்தது தெரியவந்தது. எனவே திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் சம்பவத்தன்று மேற்படி நபர் விழுந்துக் கிடந்த இடத்தில் உள்ள சட்டத்தரணியின் வீட்டில் விருந்துபசார நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பாக மறுநாள் சட்டத்தரணியின் கணவர் வௌிநாடு செல்லவிருந்ததால் இந்த விருந்துபசார நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த மறுநாள் காலை நாட்டை விட்டு அவர் வௌியேறியுள்ளார்.
இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமை தவறினார்களா என்பதை கண்டறிய மேல்மாகாண தென் பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கயங்க மாரப்பனவின் பணிப்புரையின் பேரில் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.