திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெருகல் - வட்டவான் பகுதியில் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் அருகே கடந்த திங்கட்கிழமை (06.01.2025) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பெயர் பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொல்லியல் எனும் பெயரில் நில அபகரிப்பு இடம்பெறக்கூடாது என்பதை உறுதிசெய்யுமாறு கோரியும் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொல்லியல் என பதாகை போடப்பட்ட வட்டவன் பகுதியிலிருந்து வெருகல் பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், தொல்லியல் சட்டம் தமிழருக்கு மட்டுமா? அழிக்காதே அழிக்காதே விவசாயத்தை அழிக்காதே, வேண்டாம் வேண்டாம் விகாரை வேண்டாம் போன்ற வாசகங்களை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வெருகல் பிரதேச செயலகத்திற்குச் சென்று தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.எம்.அனஸ் அவர்களிடம் கையளித்தனர்.குறித்த இடத்தில் தொல்லியல் திணைக்களத்தின் சேருநுவரவுக்கான பொறுப்பதிகாரி G.கிறிசாந்த இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தொல்லியல் என போடப்பட்டிருந்த பதாகை குறித்த இடத்திலிருந்து நேற்றிரவு இனந்தெரியாதோரால் அகற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.