“சீனா, இந்தியா ஆகிய இரண்டு வல்லரசுகளையும் சமநிலையாகக் கொண்டுசெல்வது இலங்கை அரசாங்கத்துக்குச் சவாலுக்குரிய விடயமாகும். ஆகவே, இந்த அரசாங்கம் அதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை பொறுத் திருந்து பார்க்கவேண்டும்” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் வழங்கும்போது சுமந்திரன் இவ்வாறு கூறினார்.
“தற்போதைய ஆட்சியாளர்கள் இடதுசாரிக் கொள்கையை உடையவர்கள். ஆகவே, சீனாவுடன் அல்லது பொதுவுடைமை தத்துவத்தை வைத்திருக்கின்ற நாடுகளுடன் அவர்கள் தொடர்புகளை வைத்திருப்பது புதிய விடயம் அல்ல” என்று குறிப்பிட்ட சுமந்திரன், “அதேவேளை, மிகவும் அண்மைய நாடாக இருக்கும் இந்தியாவுடன் நிச்சயம் நெருக்கமான தொடர்பு பேணப்பட வேண்டும்” என்றும் சுட்டிக்காட்டினாா்.
“இந்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முதலில் இந்தியாவுக்கு சென்று வந்துள்ளார். ஆகவே, இந்தியாவுடன் நல்ல உறவைப் பேணுவதற்கான சமிக்ஞை வெளிக்காட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்த சுமந்திரன், “அதேவேளையில், தங்களுடைய பொருளாதாரக் கொள்கையுடன் இணங்கிச் செயற்படுவதாகக் கருதுகின்ற சீன அரசாங்கத்துடனும் அநுர தரப்பினர் தொடர்புகளைப் பேணுகின்றனர்” என்றும், “இந்த இரண்டு தொடர்பாடல்களையும் எந்தவகையில் கொண்டு செல்லப் போகின்றார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்றும் அவா் மேலும் தெரிவித்தாா்.
“ஏனென்றால், இந்தியாவும் சீனாவும் நட்பு நாடுகள் அல்ல” என்று சுட்டிக்காட்டிய சுமந்திரன், “அந்தப் பூகோள உண்மையும் இலங்கை அரசாங்கத்துக்குத் தெரியும்” என்றும், “ஆகவே, நட்பு நாடுகளாக இல்லாத இரண்டு வல்லரசு நாடுகளுடன் சம தூரத்தில் இருந்து, சமநிலையாகக் கொண்டு செல்வது சவாலுக்குரிய விடயமாகும்” என்றும் தெரிவித்தாா்.