“பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்றப் பிரதிநிதிகளுடன் இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு, தமிழ் தேசிய அரசியலில் முக்கிய திருப்பு முனையின் ஆரம்பப் புள்ளியாக அமையும்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நம்பிக்கை வெளியிட்டுள்ளாா்.
சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பிலே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார்.
”25 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு ஆக்கபூர்வமாக நடைபெறவேண்டும். கட்சி ரீதியாக பேசப்பட்டு இணக்கப்பாட்டை எட்டுகின்ற வகையில் அந்தச் சந்திப்பு இருக்க வேண்டும். நாங்கள் கலந்துபேசிவிட்டு பின்னர் கட்சியிடம் கேட்டு வருவோம் என்று கூறி பிற்போடுதல் கூடாது என்பதற்காக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா்களையும் உள்ளடக்கியதாக அந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தாா்.
“இந்தச் சந்திப்பு தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைவதற்கு ஆரம்ப புள்ளியாக இருக்கும் என நங்கள் நம்புகின்றோம்” என்று தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “அதற்காக நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கின்ற குறைந்தது பத்துப் உறுப்பினர்கள் மத்தியில் இனக்கப்பாடு அவசியம்” என்றும் கூறினாா்.
“தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை வலியுறுத்தி ஆணை பெற்ற தரப்புக்கள் அதை விளங்கிக்கொண்டு செயற்படாது விட்டால் மக்கள் பாரம்பரிய தமிழ்த் தேசியத்தை விரும்புகின்ற அமைப்புக்கள் மீது வெறுப்பைத்தான் காண்பிப்பார்கள்” என்றும் குறிப்பிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “அதை உணர்ந்து எல்லோரும் செயற்படவேண்டும் என்பதால்தான் இந்த முயற்சியில் ஈடுபடுகின்றோம்” என்றும் மேலும் தெரிவித்தாா்.