மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பிணை எடுத்துத் தருவதாக கூறி இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 


மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பிணை எடுத்துத் தருவதாக கூறி 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சமாக பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் கொலை தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்வர்களை நீதிமன்றில் பிணை எடுத்து தருவதாக கூறி 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நீதவானின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவரும், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவருமான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று சனிக்கிழமை (4) இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாவட்டதிலுள்ள நீதவான் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வெல்லாவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்ற பிணையில் எடுத்து தருவதாக தலா ஒருவரிடம் 20 ஆயிரம் ரூபா வீதம் 60 ஆயிரம் ரூபாவை கடந்த நவம்பர் மாதம் 18 ம் திகதி இலஞ்சமாக பெற்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் அவர்களை பிணையில் எடுத்து விடுத்ததையடுத்து பணத்தை இலஞ்சமாக கொடுத்தவர் இது தொடர்பாக நீதவான் கவனத்திற்கு கொண்டுவந்ததையடுத்து நீதவான் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்யுமாறு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கட்டளை பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து குறித்த கான்ஸ்டபிள் அங்கிருந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டதுடன், இது தொடர்பாக பொலிஸ் புலனாய்வு பிரிவினரை விசாரணை செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பணித்திருந்தார்.

இதன் போது குறித்த பணத்தை இலஞ்சமாக பெற்றதற்கான ஆதாரத்தை புலனாய்வு பிரிவினர் தேடி விசாரணை செய்து வரும் நிலையில், பொலிஸ் கான்ஸ்டபிள் இலஞ்சம் வாங்கியவரின் வங்கி கணக்கிற்கு இலஞ்சமாக வாங்கிய பணத்தை மீண்டும் வைப்பிலிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இலஞ்சம் வாங்கியுள்ளார் என்பதை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்தி, பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தின் ஆலோசனைக்கமைய குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்குமாறு பொலிஸ் திணைக்களம் அறிவித்ததற்கு அமைய உடனடியாக அவர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.