வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

 


வடக்கு - கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும். அத்துடன் மகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றது. 

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

நடந்து  முடிந்த தேர்தல் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவை இணைய வழி ஊடாக பேசியுள்ளோம். 

இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசினோம். அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும். அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ்  கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம். 

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளோம். 

அதற்கு முன்னதாக மாவட்ட  நிறைவேற்றுக் குழுக்கள் கூடி என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் எனவும் தீர்மானிப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இருக்கிறது. 

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்பது சரியான  முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும என்பதில் நாம் ஆணித்தரமான கருத்துக்களை கொண்டிருக்கின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கக் கூடிய புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.

புதிய அரசாங்கம் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள். நிர்வாகத்தில் மாற்றம். அரசியலில் மாற்றம். ஊழல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவது. என பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது எம் மக்களது கருத்தாக இருக்கிறது.