இன்றைய தினம் களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவானால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2023 நவம்பர் 24ம் திகதி மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நகுலேஸ் தலைமையில் இடம்பெற்ற மாவீரர் குடும்ப உறவுகள் கௌரவிப்பு நிகழ்வினை மேற்கொண்டிருந்த போது பயங்கரவாதத்தைத் தூண்டுவதாகாக்கூறி இவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெல்லாவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சுமார் இரணடு மாதங்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக குறித்த வழக்குக் கோவை அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைவாக குறித்த வழக்கில் இருந்து நகுலேஸ் முற்றாக விடுவிக்கப்பட்டதுடன், வழக்கும் முடிவுறுத்தப்பட்டது.
இது தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த 2023ம் ஆண்டு மாவீரர் தின அனுஸ்டிப்புக்காக அரசாங்கத்தினால் எதுவித தடைகளும் பிறப்பிக்கப்படாத நிலையில் பொலிஸாரினால் என்மீது வேண்டுமென்றே நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டு நாங்கள் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு ஆரம்பிக்க இருக்கும் தருவாயிலேயே தடையுத்தரவு எனக்கு காண்பிக்கப்பட்டது. ஆனாலும் நாங்கள் நீதிமன்றத்திற்கான கௌரவைத்தை வழங்கி தடையுத்தரவிற்கு மதிப்பளித்து எங்கள் நிகழ்வினை நிறுத்தியிருந்தோம். ஆனாலும் என்னை சிறுவிசாரணை என்று அழைத்துச் சென்று வேண்டுமென்றே பொலிஸாரால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து என்னை சிறையில் வைத்தது மாத்திரமல்லாமல் இத்தனை காலம் வழக்கும் தொடரப்பட்டு இன்று அதற்கு ஒரு தீர்வும் கிடைத்துள்ளது.
தெய்வம் நின்றருக்கும் என்ற விடயம் என் விடயத்தில் உறுதியாகியுள்ளது. ஆனால் இதே போன்று பொலிஸாரால், பாதுகாப்பு பிரிவினரால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இன்றும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்களின் விடுதலை குறித்து தற்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் கரிசனை கொள்ள வேண்டும்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது வடக்கு கிழக்கு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருப்பவர்களின் விடுதலை என்பதும் ஒன்றாகும். அந்த அடிப்படையில் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அவர்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
எனது விடயம் தொடர்பில் நான் கைது செய்யப்பட்டிருந்த போது எனக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சிகளின் அரசியற் பிரமுகர்கள், எனக்காக இன்றுவரை எதுவித கொடுப்பனவுகளும் இன்றி வழக்காடிய எனது சட்டத்தரணிகளான ரமணா, கிருபாகரன் உள்ளிட்ட ஏனைய சட்டத்தரணிகள் மற்றும் வவுனியாவில் இருந்து வருகை தந்த சட்டத்தரணி மற்றும் ஊடகவியலாளர்கள், எனது கட்சி உறுப்பினர்கள், உறவுகள், முன்னாள் போராளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.