வரதன்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள தும்பங்கேணி இளைஞர் விவசாய திட்டக் கிராமத்தினுள் உட்புகுந்த மூன்று காட்டுயானைகள் அங்குள்ள வெள்ளிமலைப் பிள்ளையார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றின் சுற்று வேலிகளை காட்டுயானைகள் துவம்சம் செய்துவிட்டு சென்றுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேசத்தில் மிக நீண்ட காலமாகவிருந்து இவ்வாறு காட்டுயானைகளின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அப்பகுதியிலுள்ள, வெல்லாவெளி, வேத்துசேனை, காக்காச்சிவட்டை, விவேகானந்தபுரம், தும்பங்கேணி, திக்கோடை, களுமுந்தன்வெளி, உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அல்லும் பகலும் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கலாய்க்கின்றனர்.
அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய் காட்டினை அண்மித்த சூழலில் சுமார் 30 இற்கு மேற்பட்ட காட்டுயானைகள் பகலில் தங்கி நிற்பதாகவும், பின்னர் இரவு வேளைகளில் யானைகள் இவ்வாறு தினமும் கிராமங்களுக்குள் உட்புகுந்து வீடுகளையும். பாடசாலைகளும், பயிரினங்களையும் துவம்சம் செய்து வருவதோடு, மக்களையும், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் அழித்து வருவதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
யானை வெடிகளை வைத்து யானைகளை விட்டினாலும் அதற்கு பழக்கப்பட்டுள்ள காட்டு யானைகளை உடனடியாக தமது பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.