பொங்கு தமிழ் மக்கள் எழுச்சி பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் எழுச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்வில் பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் ஒன்றியச் செயலாளர் சிவகஜன் உரையாற்றும் போது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அழிக்கும் முயற்சிகளை எதிர்க்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
சிவகஜன் மேலும் கூறுகையில், சிறிலங்கா அரசு ‘ஏக்கிய ராஜ்ஜிய’ என்ற பெயரில் ஒற்றையாட்சி கொள்கையை வலுப்படுத்த தமிழ் மக்களை முடக்க நினைப்பதாகவும், இது இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும் சாடினார்.
தமிழ் மக்களின் விடுதலைச் செயற்பாடுகளை சிதைக்க, அரசியலில் தமிழர் பிரதிநிதித்துவத்தைப் பலவீனப்படுத்தும் சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதை முறியடிக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்கள் ஆதரவுடன் செயற்பட வேண்டும் என்றும் சிவகஜன் வலியுறுத்தினார்.
தமிழ்த் தேசியம் தேர்தல் அரசியலைத் தாண்டிய முழுமையான மக்கள் இயக்கமாக வேண்டும். சமூக விடுதலை, பெண்ணிய விடுதலை, வர்க்க விடுதலை ஆகிய அம்சங்களை இணைத்து தமிழ்த் தேசிய எழுச்சி வடிவமைக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் சிவகஜன் மேலும் வலியுறுத்தினார்.