கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய சோளார் அமைப்பு ஆரையம்பதியில் திறந்து வைப்பு.

 














மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் அல்ட்றா அலுமிநியம் தனியார் நிறுவனம் கிழக்கிலங்கையில் மிகப் பெரிய சோளார் அமைப்பினை நிறுவி திறந்து வைத்துள்ளது. 

சூரிய சக்தியினைப் பயன்படுத்தி 2 மெகாவோட் மின் உற்பத்தியினை மேற்கொள்ளும் கூரை மீதான சோளார் அமைப்பினை இந்நிறுவனம் நிறுவியுள்ளது. இதன் செயற்பாட்டினை இலங்கை மின்சார சபையின் கிழக்குப் பிராந்திய பிரதி பொது முகாமையாளர் டபில்யூ.எஸ்.எல்.ஏ. விஜயதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மண்முனைப் பற்று பிரதேச செயலகப் பரிவில் அமைந்துள்ள அல்றா நிறுவனத்தில் வைத்து திறந்து வைத்தார்.

அலுமினிய கட்டுமான உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் இத்தொழிட்சாலைக்குத் தேவையான மின்சாரம் இத்திட்டத்தினூடாகக் இவர்களுக்குக் கிடைக்கின்றது. இதனூடாக ஓர் ஆண்டில் 2.9 மில்லியன் கிலோ வோட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் தலைவர் ஏ.எம். உனைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹயர் எனர்ஜி நிறுவனத்தின் பணிப்பாளர் கலீல் மஜீட், கிழக்கு மாகாண ஆளுனரின் பிரத்தியோக செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டதுடன், பல திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள், அலுமிய துறை உற்பத்தியாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் அலுமினிய தொழிற்சாலையினையும் பார்வையிட்டனர்.

இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு வருடத்தில் மற்றுமொரு மயில்கல்லாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஜௌபர் தனது உரையில் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தினூடாக எமது தொழிட்சாலைககுத் தேவையான மின்சாரம் கிடைக்கப் பெறுவது மாத்திரமின்றி சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கும் பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பசுமை வளர்ச்சி எங்கள் நிறுவனத்தின் சிறப்பம்சம் மட்டுமல்லாது அது எங்கள் செயல்பாட்டு நெறிமுறையின் முக்கிய பகுதியாகும் எனவும் தெரிவித்தார். 

இதேவேளை 20 ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் தற்பொழுது 240 ஊழியர்களுடன் பயனிப்பதாகவும், அதில் 70 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் இப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும், பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகும். மண்முனைப் பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர் திருமதி. என். சந்தியானந்தி  அவர்களின் வேண்டுகோளின் பேரில் அதிகமான பெண்கள் தலைமைதாங்கும் குழும்பங்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

மேலும் பிரதம அதிதி இங்கு கருத்து வெளியிடுகையில் இங்கே உற்பத்தி செய்யப்படும் மின்சாரமானது 1200 வீடுகளுக்கு வழங்கக்கூடிய எனவும், மாதாந்தம் 1400 மெற்றிக்தொன் காபனீரொட்சைடினை தவிர்க்கக் கூடியதுமாகும் எனவும் குறிப்பிட்டார். 

இந்நிறுவனமானது சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO 9001:2015 தரச் சான்றிதழினை கடந்த டிசம்பர் 24 அன்று பெற்றுக் கொண்ட மட்டக்களப்பின் முதல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.