ரோகிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளரிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை .

 


முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் போரில் இருந்து தப்பி வந்த சிறுவர்கள் உள்ளிட்ட ரோகிங்கியாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளரிடம், “ரோகிங்கியாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பார்களா?” என குற்றப் புலனாய்வு திணைக்களம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதன்போது வெகுஜன மக்கள் போராட்டம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு, பழைய காவல்துறை தலைமையகக் கட்டிடத்தில் அமைந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் மனிதக் கடத்தல் வியாபாரம் குறித்த விசாரணைப் பிரிவின் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்ட, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் யாட்சன் ஃபிகிராடோவிடம் சுமார் ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் கேள்விக்கு பதிலளித்த யாட்சன் ஃபிகிராடோ, அத்தகைய ஊக்குவிப்பை தான் செய்யப்போவது இல்லை என வெளிப்படையாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “ரோகிங்கியா மக்களின் வருகையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்களா எனக் கேட்டார்கள். நாங்கள் எங்களுடைய அறிக்கையில் பொது வெளியில் சொல்லியிருக்கின்றோம் அகதிகள் இலங்கையில் இங்கு வந்திருப்பவர்களை இங்கே தொடர்ந்து இருப்பதற்கோ அல்லது தொடர்ந்து இங்கு வருவதற்கோ நாங்கள் எப்போதும் ஊக்குவிக்கவில்லை. ஆனால் இருப்பவர்களை வந்திருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைப்பது பொருத்தமாக அமையும். சர்வதேச சட்ட நியமங்களையும் பின்பற்றக்கூடியதாக இருக்கும் என்பதை வலியுறுத்தி என்னுடைய வாக்குமூலத்தை வழங்கியிருந்தேன்” என்று அவா் தெரிவித்தாா்.