கைது செய்யப்படும் அனைத்து சந்தேக நபர்களின் உயிர்களுக்கும் அரசாங்கம்தான் பொறுப்பு .

 



கைது செய்யப்படும் அனைத்து சந்தேக நபர்களின் உயிரையும், பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் உயிரையும் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறுகிறார்.
கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களின் மரணம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
"இப்போது பலர், தேசிய பாதுகாப்பு பற்றி அதிகமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த நாட்டில் பாதாள உலகக் கோஷ்டிகளை உருவாக்க, வளர்க்க மற்றும் பராமரிக்க, பெருமளவான அரசியல்வாதிகள் தலையிட்டுள்ளனர். அதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. அவ்வாறு செய்துவிட்டு, பாதாள உலகக் கோஷ்டிகளின் செல்வாக்கு அதிகரிக்கும்போது, தேசிய பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். தேசிய பாதுகாப்பின் அர்த்தம் கூட தெரியாமல். தங்களுக்கு ஒருவித பாதுகாப்பைப் பெறுவதற்காகவே அவர்கள் அதுபற்றி பேசுகிறார்கள்.
“எங்களிடம் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். பாதுகாப்பு இல்லாமல்தான் அவர்கள் நடமாடுகிறார்கள். தேசிய பாதுகாப்பு பற்றி, கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் அதிகளவில் கூச்சல் போட்டு வருகின்றன. இந்நாட்டில், தேசிய பாதுகாப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை.
இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பொலிஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடுவார்கள். எங்களிடம் நல்ல புலனாய்வாளர்கள் உள்ளனர். உஸ்வெட்டகெய்யாவைப் போலவே, மித்தேனியவிலும் கொலைகள் நடந்தன. அந்தக் குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்பட்டனர்” என்று, அமைச்சர் மேலும் கூறினர்.