“இலங்கை பூஞ்சணயியல் மற்றும் தாவர நோயியல் சங்கத்தின்” முதலாவது சர்வதேச மாநாடு!!

இலங்கை பூஞ்சணயியல் மற்றும் தாவர நோயியலுக்கான சங்கம் (Sri Lanka Association for Mycology and Plant Pathology - SLAMPP) அதன் முதலாவது சர்வதேச மாநாடான ‘SLAMPPCon 2025’  இன்று சனிக்கிழமை (08) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

“பூஞ்சணயியல் மற்றும் தாவர நோயியலில் புதுமைகளின் மூலம் நிலைத்தன்மை" என்ற கருப்பொருளில், குறித்த சர்வதேச மாநாடு மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. 

இந்த மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களுக்கு இந்த முக்கிய துறைகளில் முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒத்துழைப்பை வளர்க்கவும் ஒரு தளத்தை வழங்கும் நோக்கில் இம்மாநாடு இடம் பெற்றது.

இலங்கை பூஞ்சணயியல் மற்றும் தாவர நோயியலுக்கான சங்கமானது 2007ம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்ட, தாவர நோயியல் மற்றும் பூஞ்சணயியல்க்கான வல்லுநர்களின் முன்னணி தொழில்முறை அறிவுசார்ந்த அமைப்பாகும், இச்சங்கமானது International Society of Plant Pathology (ISPP), Asian Mycological Association (AMA), மற்றும் Asian Association of  Plant Pathology (AASPP) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச மாநாடு, இச்சங்கத்தின் தற்போதைய தலைவர், கிழக்குப் பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியர் திருமதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தலைமையில் நடைபெறவுற்றது, 

சிறப்புரையினை கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர ஆற்றியதுடன் மேலும் இந்நிகழ்வின் அமர்வில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடத்தின் தாவர நோயியல் நிபுணரான பேராசிரியர் பால் டபிள்யூ. ஜே. டெய்லர் சிறப்புரை ஆற்றினார்.

இலங்கையில் தாவர நோயியலின் வரலாறு 1867 ஆம் ஆண்டின் காபி தோட்டங்களில் ஏற்பட்ட Coffee rust தொற்றுநோய்க்கு முந்தையது, இந்த நோய் மலையகத்தில் காபி தோட்டங்களை முற்றிலும் அழித்ததுடன், இந்நோய் முதன்முதலில் மடுல்சிமையில் உள்ள (இன்றைய பதுளை மாவட்டம், ஊவா மாகாணம்) ஒரு தோட்டத்தில் ஆரம்பித்து, காபி பயிரிடும் அனைத்துப் பகுதிகளிலும் வேகமாகப் பரவி, இலங்கையில் காபி பயிர்ச்செய்கையின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, இந்நிலைமை இலங்கையில் தாவர நோயியல் ஆராய்ச்சியிற்கு வழிவகுத்ததுடன் வெப்பமண்டல தாவர நோய் ஆய்வுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

இலங்கையில் பூஞ்சணயியல் துறை இன்னும் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1950 களில், 2,100 க்கும் மேற்பட்ட பூஞ்சண இனங்கள் ஆவணப்படுத்தப்பட்டதுடன், இவற்றில் 60% மானவை இலங்கையிலிருந்து புதிய இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

மேலும் 1936 ம்  ஆண்டுவரை 340 தாவர இனங்களை பாதிக்கும் 885 தாவர நோய்களை பூஞ்சணயியல் துறை ஆராய்ச்சியாளர்கள் (Mycologists) கண்டறிந்தனர். இன்று, பூஞ்சணயியல் மற்றும் தாவர நோயியல் ஆகியவை, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சர்வதேசத்தின் பல நாடுகளில் இருந்து பல அறிவியலாளர்கள் நிகழ்நிலை ஊடாகவும் மேலும் பல அறியலாளார்கள் நேரிலும் பங்கேற்று தமது ஆய்வுகளை முன்வைத்திருந்தனர்.

இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் ஜீவரெத்தினம் கெனடி உள்ளிட்ட பல கல்வியியலாளர்கள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் என பலர் கலந்துகொண்டர்.

சுமார் 40 ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.