பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையான விழிப்பூட்டல் சைக்கிள் பயணத்தின் நிறைவு கட்டத்தை சமூக செயற்பாட்டாளர் வ. க. செ. மீராபாரதி நெருங்கி உள்ளார்.

 



பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையான விழிப்பூட்டல் சைக்கிள் பயணத்தின் நிறைவு கட்டத்தை சமூக மாற்றத்துக்கான முன்னோடி செயற்பாட்டாளர் வ. க. செ. மீராபாரதி நெருங்கி உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை காரைதீவை வந்தடைந்த இவருக்கு காரைதீவு ஸ்ரீ சிவசக்தி குரு குடைச்சாமி சர்வமத பீடத்தில் வைத்து மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.

 

இயற்கையோடு இணைந்த வாழ்வியலின் அவசியத்தை குறைந்தது பத்து இலட்சம் மக்களுக்கு போதிக்கின்ற வேலை திட்டத்தை முன்னெடுத்து வருகின்ற விழிப்பூட்டல் செயற்பாட்டாளரும், சாதனை மாணவியுமான சம்மாந்துறையூர் மின்மினி மின்ஹா நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.

சமூக மாற்றத்துக்கான முன்னோடி செயற்பாட்டாளர் மீராபாரதி அடங்கலாக நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் குடைச்சாமி சர்வமத பீடத்தின் ஸ்தாபகரும், தலைவருமான ஜீவாகரன் சுவாமிகள் ஆசிர்வாதம் வழங்கினார்.

பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையான அவருடைய விழிப்பூட்டல் பயணத்தின் நோக்கங்களை மீராபாரதி எடுத்துரைத்தார்.
சைக்கிள் பாவனை ஊக்குவிக்கப்பட வேண்டும், சைக்கிள் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பாதுகாப்பான மிதிவண்டி பாதைகளை அரசாங்கம் அமைத்து தர வேண்டும், சைக்கிள் பாவனை செலவு குறைந்தது, சிக்கனம் நிறைந்தது, ஆரோக்கியமான வாழ்வியலுக்கு பொருத்தமானது, அற்புதமான உடற்பயிற்சி ஆகும், பொருளாதார ரீதியாக நன்மை வாய்ந்தது மாத்திரம் அல்ல இயற்கை சுற்று சூழல் பாதுகாப்புக்கு உகந்தது, இச்சைக்கிள் விழ்ப்பூட்டல் பயணத்தின் மூலமாக வீட்டு தோட்ட செய்கை, பயன் தரும் பழ மரங்களின் நடுகை, உள்ளூர் உற்பத்திகளுக்கான ஊக்குவிப்பு ஆகியவற்றை குறித்த விழிப்பூட்டல்களையும் மக்களுக்கு வழங்குகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.

ஓய்வு நிலை பிரதி அதிபர் எஸ். தில்லையம்பலம், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன், திடீர் மரண விசாரணை அதிகாரி த. தர்மேந்திரா, அழகுக்கலை நிபுணர் என். ஜெயகலா, அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் தலைவர் ஐ. எல். ஜலீல் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள்.

தொழிற்சங்க தலைவர் எஸ். லோகநாதன் இங்கு கருத்து கூறுகையில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் வாகனமாக சைக்கிள்தான் விளங்குகின்றது, மீராபாரதியின் விழிப்பூட்டல் சைக்கிள் பயணத்தை நாம் ஆதரிக்கின்றோம், அவருடைய நோக்கங்களுடன் ஒன்றித்து பயணிப்பவர்களாக உள்ளோம் என்றார்.

மீராபாரதி கடந்த 05 ஆம் திகதி பருத்தித்துறையில் இந்த விழிப்பூட்டல் சைக்கிள் பயணத்தை ஆரம்பித்தார். எதிர்வரும் 25 ஆம் திகதி பொத்துவிலில் இப்பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார். தரித்து நிற்கின்ற பிரதேசங்களில் விழிப்பூட்டல் கூட்டங்களையும் நடத்துகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.