மாட்டிறைச்சியின் விலையை 1700 ரூபாயாக குறைப்போம், பிரதேச சபையில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம் - சுயேச்சைக் குழு

 


இறக்காமம் பிரதேச சபையில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதுடன் இதற்காக  மாட்டிறைச்சியின் விலையை 1700 ரூபாயாக குறைக்க இந்த தேர்தலில் சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிட்ட தீர்மானித்துள்ளோம் என கால்பந்து சின்னம் சுயேச்சைக் குழுத் தலைவர் சட்டத்தரணி கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச  சபைகளுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்த பின்னர் அம்பாறை மாவட்ட செயலகத்தில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் பிரதேச சபையானது  3 ஆவது தேர்தலை முகம் கொடுக்கின்றது.இதில் சுயேட்சைக்குழுவாக நாங்கள் போட்டியிடுகின்றோம்.கட்சிகளில் அவநம்பிக்கை காரணமாக நாம் சுயேட்சையில் களமிறங்கியுள்ளோம்.

அதேவேளை இறக்காமம் பிரதேச வைத்தியசாலையை ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதும் அத்துடன் இறக்காமம் பிரதேசத்தில் மாட்டிறைச்சியின் விலையை 1700 ரூபாய்க்கு வழங்குவதும் எமது சுயேட்சைக் குழுவின் நோக்கமாகும்.

இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவு இன்மையால் அம்பாறை பொது வைத்தியசாலையில் பதிவுகள் சிங்கள மொழியில்  இடம்பெறுவதனால் அகமது என்ற பெயர் முகம்மது எனவும் அன்சார் என்ற பெயர் கின்சார் என்றும் கபீப் என்ற பெயர் குபாப் என்றும் மாறி வருவதனால் பாடசாலைக்கு மாணவர்களை சேர்ப்பதில் சத்தியகடதாசி தேடுகின்ற அவல நிலைக்கு இறக்காமம் மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான உரிமை சார்ந்த பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காகவே எந்தவித கட்சித்தலைவர்களதும் அழுத்தமின்றி இம்முறை சுயேட்சைக்குழுவில் சுயமாக இயங்க தீர்மானித்துள்ளோம்.

அத்தோடு இறக்காமம் மக்களின் நீதி நிர்வாகம் அம்பாறையுடன் இணைக்கப்பட்டிருப்பதனால் மொழி ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம்.நீதிமன்றத்தில் சுயமாக எமது மொழியில் அபிப்பிராயங்களை கூற முடியாமல் எமது மொழி உரிமை மீறப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மூலமாக நிர்வாகம் இருக்கின்ற இறக்காமம் மக்களை நீதி நிர்வாக விடயங்களை அக்கரைப்பற்றுடன் இணைத்து தனியான சுற்றுலா நீதிமன்றத்தை ஏற்படுத்தி எமது மக்களின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வருவதற்காகவே சுயேட்சைக்குழுவில் போட்டியிடுகின்றோம்.