நாட்டில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் .

 



இந்நாட்டில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜையும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய சிகிச்சை சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

அண்மையில் கண்டி ரனவன புரான விகாரையில் இடம்பெற்ற கிராமப்புற மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கும் “சுவ உதான” நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தின் ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் சார்பான அரசாங்கம் என்ற ரீதியில் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் இந்நாட்டில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜையும் குறிப்பிட்டக் காலப்பகுதிக்குள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் அவர்களுக்கான சிகிச்சை சேவைகளையும் வழங்க தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எவ்வாறாயினும் இவ்வருடம் அல்லது அடுத்த வருடத்திற்குள் மேற்படி விசேட திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த நீண்டகால வேலைத்திட்டம் அரசாங்கத்தின் தேசிய கொள்கை வேலைத்திட்டத்திலும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அதை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நீண்டகால திட்டத்தின் குறுகிய கால நடவடிக்கையாக “சுவ உதான” என்னும் நடமாடும் மருத்துவ முகாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களை தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பதற்காக இந்த விசேட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.