பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா அல்லது அவர் மீது வழக்கு தொடரப்படுமா ?

 


பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா அல்லது அவர் மீது வழக்கு தொடரப்படுமா என்று முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய குடியரசு முன்னணியில் விகாரை சின்னத்தில் கொழும்பில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று(15) இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது சம்பிக ரணவக்க இதனை தெரிவித்துள்ளார்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கம் அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படவில்லை. அரசியல் நோக்கம் இருந்திருந்தால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடனேயே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும். இது அல் ஜசீரா எழுப்பிய கேள்வியால் ஏற்பட்ட விளைவாகும்.

இந்த அரசாங்கம் எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட அறிக்கைகளை பொதுமக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும், குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் முறையாக விளக்கவில்லை.