கனடாவின் நீதியமைச்சரான கரி ஆனந்தசங்கரியின் வரலாற்றுப்பின்னணி அனைத்து தமிழர்களும் அறிய வேண்டிய ஒன்று .

 
 
 

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவை மாற்றத்தில், இலங்கையில் பிறந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, நீதி அமைச்சராகவும், சட்டமா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களில் இரண்டு அமைச்சரவை பதவிகளுக்கு அவர் பதவியேற்றுள்ளார்.
கரி ஆனந்தசங்கரிஎன அழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சி உறுப்பினரும், மனித உரிமை வழக்கறிஞரும் ஆவார்.

இவரைப்பற்றி சுருக்கமாகக் கூறின் கனடாவில் தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்ட வன்முறை சார்ந்த ஒரு கலாச்சாரத்தை அழிப்பதற்கான கனடிய தமிழ் இளைஞர்கள் சேவை நிலையத்தை ஆரம்பித்து கனடாவில் தமிழ் இளைஞர்களின் முரண்பாடுகளைத் தீர்க்கப்பாடுபட்டவர்.
அதேபோல கனடாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளிலும் ஒரு காலகட்டத்தில் ஆரோக்கியமான பங்களிப்பை வழங்கியவர்.
இதற்கும் மேலாக கனடியத் தமிழ்க் கொங்கிரஸ் என்ற அமைப்பின் வளர்ச்சிக்கான பொருளாதார உதவுனராக இருந்தவர்.
வழக்கறிஞரான ஹரி ஆனந்தசங்கரி, சிறப்பான அரசியல்வாதியாகவும் பெயர்பெற்றுள்ளார்.
லிபரல் கட்சி தலைவராக ஜஸ்ரின் ரூடோவை தேர்வு செய்வதிலும் ஹரி ஆனந்தசங்கரி தீவிர பங்காற்றியவர்.
அதுபோலவே பிரம்டன் நகரில் இடம்பெற்ற லிபரல் கட்சியின் மீளெழுச்சிக்கான தேர்தல் பிரச்சார மாநாட்டில் தனது படை பட்டாளங்களுடன் கலந்து கொண்டு தான் சமூகத்தால் மதிக்கப்படும் ஒரு நபர் என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்தியிருந்தார்.
கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ. ஆனந்தசங்கரியின் இரண்டாவது மகன் ஆவார். 1973 இல்இலங்கையில் பிறந்த இவர் தனது 10வது அகவையில் 1983 இல் தனது தாயா தாயுடன் அயர்லாந்திற்குச் சென்று பின்னர்  கனடாவிற்குப் புலம்பெயர்ந்தார்.
ரொறன்ரோவில் உள்ள ஓஸ்குட் ஹால் சட்டப் பள்ளியில் சட்டம் பயின்று 2006 இல் பட்டம் பெற்றார். பின்னர் ரொறன்ரோவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்
கனடிய லிபரல் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட பழைமைவாதக் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார்.
இலங்கைத் தமிழரான இவர் 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.
கரி ஆனந்தசங்கரி ஹரிணி சிவலிங்கம் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு பைரவி, சகானா என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இவர் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வைர விழா மற்றும் பொன் விழா விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கனடாவிற்கு அகதியாக சென்ற ஈழத் தமிழர் ஹரி ஆனந்தசங்கரி அமைச்சராகியுள்ளார்.

கரி ஆனந்தசங்கரி, இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது தமிழர் உரிமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் போன்றவற்றிற்காக வலுவான வக்கீலாக இருந்துள்ளார்.
போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அவர் வாதிட்டார்.

கனடாவில் மே 18 ஆம் தேதியை தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை அவர் ஆதரித்தார்.

ஒரு வழக்கறிஞராக, அவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழக்கறிஞர்கள் உரிமைகள் கண்காணிப்பகம் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார், தமிழர் உரிமைகளுக்காக வாதிட்டார் மற்றும் இலங்கையில் வன்முறைகளை ஆவணப்படுத்தினார். 2015 இல் Scarborough-Rouge Park பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஆனந்தசங்கரி 2023 இல் சுதேச உறவுகள் அமைச்சராக நியமிக்கப்பட்ட போது கனடாவின் முதல் இலங்கை தமிழ் அமைச்சரவை அமைச்சரானார். மார்ச் 2025க்குள், அவர் பிரதம மந்திரி மார்க் கார்னியின் கீழ் நீதி அமைச்சராகவும் அட்டர்னி ஜெனரலாகவும் தனது பங்கை விரிவுபடுத்தினார்.

அவரது தமிழ் குரல், சிங்கள பௌத்த தேசியவாதிகளிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்துள்ளது, அவர்கள் அவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று தவறாக முத்திரை குத்தியுள்ளனர். இந்த நிலை இருந்தபோதிலும், இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதிலும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதிலும் அவர் தொடர்ந்து முக்கிய நபராக இருந்து வருகிறார்.

ஆனந்தசங்கரியின் நியமனம் கனடாவின் தமிழ் சமூகத்தினரிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புக்கள் அவரது வளர்ந்து வரும் செல்வாக்கினால் மகிழ்ச்சியடைந்துள்ளன. நீண்ட கால நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவர்களின் குரலுக்கு வலுவான ஆதரவாக இந்த நியமனம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது.