அதானியை நீங்கள் வெளியேற்றவில்லை. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் உங்களை விட்டு வெளியேறி விட்டது- மனோ கணேசன்

 


அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல.  அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய மின் சுற்றுகள் இணக்கப்பட இருந்தன. இந்த பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது என்பதை மறவாதீர்கள். அதுதான் முழு திட்டம். அதை புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்டது.



அதானியை நீங்கள் வெளியேற்றவில்லை. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் உங்களை விட்டு வெளியேறி விட்டது. இது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது என பாராளுமன்றத்தில், தேசிய ஒருமைப்பாடு, நீதி அமைச்சு விவாதத்தை எதிர்கட்சிகள் சார்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.