கல்விப் பொதுத் தராதர உயர்தர (உ/த) பரீட்சை வரை அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாடசாலைக் கல்வி கட்டாயமாக்கப்படும் -

 

 


 

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பப்படுவதைத் தடுக்கும் வகையில், கல்விப் பொதுத் தராதர உயர்தர (உ/த) பரீட்சை வரை அனைத்துப் பிள்ளைகளுக்கும் பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்கும் வகையில் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுவின் சமீபத்திய அமர்வின் போது, ​​மே 2023 முதல் கடந்த ஆண்டு (2024) ஜூன் வரை 683 வயதுக்குட்பட்ட தொழிலாளர்கள் வீட்டு வேலைக்காக இடம்பெயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

​​வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் பெண்களுக்கு எதிரான அநீதிகளைத் தடுப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் நேரடியாகப் பொறுப்பு என்று  தெரிவித்துள்ள அமைச்சர் எவ்வாறாயினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகம் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் தலையிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். “உயர்தரப் பரீட்சை வரை சகல பிள்ளைகளுக்கும் பாடசாலைக் கல்வியை கட்டாயமாக்குவதற்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கின்றோம். அது நடைமுறைப்படுத்தப்பட்டால், வயது குறைந்த நபர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பப்படுவது போன்ற பிரச்சினைகள் இனி எழாது.”

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் பிற நடைமுறைகள் முறையாக செயல்படுத்தப்படுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என்றும் அவர் கூறினார். வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றை செயல்படுத்தும் பொறுப்பில் உள்ள சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கடந்த காலத்தில் தங்கள் வேலையைச் செய்யவில்லை என்பதுதான் பிரச்சினை. உதாரணமாக, சில அதிகாரிகள் பணத்துக்காக சில அறிக்கைகளை அங்கீகரித்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.