மட்டக்களப்பில் இடம் பெற்ற வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியும் வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலய அணியினர் சம்பியனாக தெரிவு!!

 






























































சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் இடம் பெற்ற மாபெரும் வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியினரும், வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலய அணியினரும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மகளீரை வலுப்படுத்தும் நோக்கில் "நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக - அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்"  எனும் தொனிப்பொருளில்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளுக்கு இடையிலான மற்றும் மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்பட்ட மாபெரும் சுற்றுப் போட்டி கடந்த (06) திகதி மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெற்றுவந்த போட்டி நிகழ்வின் இறுதி நாள் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளீதரன் அவர்கள் கலந்து கொண்டு போட்டியில்  வெற்றி பெற்ற அணியினருக்கு சான்றிதழ்கள், நினைச்சின்னம் மற்றும் பணப் பரிசில்கள் என்பவற்றையும் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி, நிகழ்விற்கான அனுசரணையாளர்கள், மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக உதவி மாவட்ட அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.சனஞ்ஜெயன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மகளீர் தினத்தினை சிறப்பிக்கும் வகையில் இம்மாதம் முதலாம் திகதி முதல் எட்டாம் திகதி வரை மாவட்டத்தில் பல்வேறுபட்ட மகளீர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுவந்த நிலையில் குறித்த வலைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றுள்ளதுடன், இப்போட்டி நிகழ்வுகளில் 16 பாடசாலை அணிகளும், மாவட்ட செயலக அணியும், 9 பிரதேச செயலக அணிகளும் பங்குபற்றி பலத்த போட்டிக்கு மத்தியில், பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான போட்டியில் மட்/வந்தாறுமுலை மத்திய மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினையும், மட்/மமே/வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம் இரண்டாம் இடத்தினையும், மட்/மமே/பண்டாரவெளி நாமகள் வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் தமதாக்கியதுடன் நான்காம் இடத்தினை மட்/சிசிலியா பெண்கள் கல்லூரி தமதாக்கியுள்ளது.

அதே வேளை மாவட்ட  செயலக மற்றும் பிரதேச செயலக அணிகளுக்கு இடையில் இடம் பெற்ற போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியினர் முதலாம் இடத்தினையும், வவுணதீவு பிரதேச  செயலக அணியினர் இரண்டாம் இடத்தினையும் மாவட்ட செயலக அணியினர் மூன்றாம் இடத்தினையும், வாகரை பிரதேச செயலக அணியினர் நான்காம் இடத்தினையும் பெற்றுள்னர்.

இவர்கள் அனைவருக்குமான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் நிகழ்விற்கு அதிதிகளாக கலந்து சிறப்பித்தோரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.