சிறைக் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்

 


சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால் பாரிய இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்திக்கும் வகையில் சிறைக் கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் 10 ஆயிரத்து 700 கைதிகளுக்கே இடம் உள்ளது. எனினும் சிறைச்சாலை கட்டமைப்புக்குள் தற்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  கைதிகள் காணப்படுகின்றனர்.

அவர்களின் 19,000 பேர் விளக்கமறியல் கைதிகளாக உள்ளனர்.  கொழும்பு, பொலனறுவை  உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகளிலும் இட நெருக்கடி காணப்படுகிறது. 

கடந்த இரண்டு வருடங்களிலும் அந்த நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் இம்முறை அதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.என்றார்.

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நீதியமைச்சின் செயலாளர் தலைமையில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்படும். குழுவின் அறிக்கைக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான சட்டமூலம் வெகுவிரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்தார்.