இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் திரு.விக்ரம் மிஸ்ரி அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானால், 1980-களில் நாட்டின் உள்நாட்டுப் போரில் தலையிட்ட இந்திய அமைதி காக்கும் படை நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்து கொள்வது இதுவே முதல் முறை.
இலங்கையுடனான தனது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த சீனா தொடர்ந்து முயற்சித்து வரும் வேளையில் இலங்கையும் இந்தியாவும் இவ்வாறு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ பயணத்தின் போது, எரிசக்தி இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பல துறை மானிய உதவி ஆகிய துறைகளின் கீழ் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.
இவ்வாறு கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனை மறுசீரமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் உள்ளதாக இந்திய வெளிவிவகார செயலாளர் திரு.விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
எதிர்வரும் 5ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதுடன், கலந்துரையாடலின் முடிவில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.