.jpg)
பாலர் பாடசாலை ஆசிரியைகள் எதிர்நோக்கும் பெரும் சவால்கள்
பாலர் பாடசாலை கல்வி முறையில் இலங்கை முழுவதும் ஒரே பாடவிதானம் உருவாக்கப்பட்டு கற்பித்தல் முறை நடைபெறுவதில்லை. இப்பாடசாலைகள் மாகாண முன்பிள்ளை பருவ வளர்ச்சி அதிகார சபை மூலம் மேற்பார்வை செய்யப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.
ஒரு சில மாகாணங்களில் கொடுப்பனவாக ஐந்தாயிரம் ரூபா வழங்கப்பட்டு வருவதுடன், அதற்கு மேலதிகமாக பெற்றோர் மூலம் ஒரு தொகை பணம் வழங்கப்படுகின்றது. தற்போதுள்ள வாழ்க்கைச் செலவுகளின்படி அவர்களுக்கு அது போதுமான தொகையாக காணப்படவில்லை. அத்துடன் பெளதிகவளக் குறைபாடு மற்றும் இடவசதி, விளையாட்டு முற்றம், குடிநீர் வசதி, மின்சார வசதி, மலசல கூடம் போன்றவற்றிலும் குறைபாடுகள் நிலவுகின்றன.
வேறுபட்ட பின்புலங்களிலிருந்து வருகின்ற மாணவர்களை ஒருங்கிணைத்து பணி புரிவதில் பெரும் சவாலை முன்பள்ளி ஆசிரியைகள் எதிர்நோக்குகின்றார்கள். அத்தோடு வீட்டுச்சூழலில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் பாலர் பாடசாலைக்கு வரும்போது அவர்களின் அழுகை தொடர்ச்சியாக காணப்படுவதனால், ஏனைய மாணவர்களுக்கு சரியான முறையில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது.
போதுமான கல்வி வளங்கள் இல்லாதிருப்பது வகுப்புக்களை நடத்துவதில் சவாலாக உள்ளது. இதனால் சரியான கல்வியை வழங்குவதில் சிரமங்களையும் பாலர் பாடசாலை ஆசிரியைகள் எதிர்நோக்குகின்றனர்.
அத்தோடு, பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தலையீடுகள் அதிகம் காணப்படுகின்றது. ஒரு சில பெற்றோர் பாலர் பாடசாலையில் தனது பிள்ளை அழுகின்றது என்ற காரணத்தினால் கூடவே பாலர் பாடசாலையில் தங்கியுள்ளனர். இதுவும் ஒரு சவாலாகவே காணப்படுகின்றது.
பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு முறையான பயிற்சிகள், செயலமர்வுகள் வழங்கப்படாமையினால் அவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு வசதி வாய்ப்பு குறைவாக காணப்படுகின்றது.
ஒவ்வொரு குழந்தையினதும் தனித்திறனையும் தேவைகளையும் தெரிந்து கருத்திற்கொண்டு, அதற்கேற்ப அவர்களை வழிநடத்திச் செல்வதில் அதிகப்படியான பணிச்சுமைகளை ஆசிரியைகள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
பல்வேறு மாணவர்களுடன் அதிகமான நேரத்தை செலவிடுவதுடன், அவர்களின் அழுகைகளை சமாளிப்பதிலும் அவர்களின் பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதிலும் பாலர் பாடசாலை ஆசிரியைகள் அவதியுறுகின்றனர். இதனால் அடிக்கடி மனஅழுத்தம் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இது அவர்களின் நலனையும், செயற்திறனையும் பாதிக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சமூக ஊடகங்கள், கையடக்கத் தொலைபேசி பாவனைகளுக்கு மாணவர்கள் வீட்டுச்சூழலில் பழக்கப்பட்டுள்ளமையினால் அதன் தாக்கம் பாலர் பாடசாலைகளிலும் காணப்படுகின்றது. மாணவர்களை பாடங்களில் கரிசனை காட்டுவதில் ஈடுபடுத்துவதில் போராட வேண்டியுள்ளது.
எனவே இவை போன்ற பல பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்நோக்கும் முன்பள்ளி ஆசிரியைகளின் சேவைகளை கருத்திற் கொண்டு, பெற்றோர்க அவர்களுடன் ஒருமித்து செயற்பட வேண்டும். அதன் போதுதான் வெற்றிகரமாக பாலர் பாடசாலை கல்வி முறைமையை முன்னெடுத்துச் செல்ல முடியும்.