இலங்கை - இந்திய நற்புறவு ஒன்றியத்தின் Top 100 விருது வழங்கும் விழா 15.03.2025 திகதி கண்டி மாநகரில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் போது தேசிய ரீதியில் சமூக சேவையாற்றிவரும் மத குருமார்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், அரச துறைசார் அதிகாரிகள், சிறந்த இளம் தொழில் முனைவோர் போன்ற மேலும் பல துறைகள் சார்ந்து சமூகத்திற்காக சேவையாற்றிவரும் 100 சாதனையாளர்கள் Top 100 விருது வழங்கும் விழாவின் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னால் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் ஆகிய இருவரும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் துரைமனோகரன், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் சர்வதேச இசைக் கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கைத் தூதுவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெர்னாண்டோ, பிரஜைகள் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஆர்.ஜே.ராஜபக்ஷ (ஜேபி), முன்னாள் ஜனாதிபதியின் இந்து மத இணைப்பாளர் ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, சங்கவி பிலிம்ஸ் பிரைவட் லிமிட்டட்டின் உரிமையாளர் துரைராஜா சுரேஸ், நந்தவனம் சந்திரசேகரன், தினகரன், தினகரன் வாரமஞ்சரியின் பிரதம உதவி ஆசிரியர் கே.ஈஸ்வரலிங்கம், பிரபல சமூக சேவையாளர் கலாபூஷண், தேசபந்து டீ.ஜி.துலித் சாந்த, ஏற்பாட்டுக் குழு பிரதிநிதி கலாபூசணம் கிருஸ்ணப்பிள்ளை உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டதனைத் தொடர்ந்து வரவேற்புரை, அதிதிகள் உரை என்பன இடம் பெற்றது.
நாட்டின் நாலாப் பகுதியில் இருந்தும் சாதனையாளர்கள் கலந்து கொண்டு இவ்வுயரிய விருதைப் பெற்றுக் கொண்டதுடன், நிகழ்வின் போது தினகரன் பத்திரிகையின் 93 வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில் வேலவர் அவர்களினால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், கலைத் தென்றல் நாட்டிய கலா மன்றத்தின் நடன ஆசிரியர் திருமதி இளங்கோவன் செல்வராணியின் மாணவிகளின் நடன நிகழ்வுகள் அரங்கை அலங்கரித்தது. இலங்கை தேவார பண்ணிசை வளர்ச்சி கழகத்தின் செயலாளர் திருமதி கருப்பையா வசந்த காலம் அவர்களினால் தினகரன் பத்திரிகையின் வளர்ச்சி பற்றியும் இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியம் பற்றியும் கவிதை இயற்றி பாடியிருந்தமை அவையோரினால் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது நிகழ்வின் ஏற்பாட்டாளர்களினால் அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பில் தொழில் துறையில் சாதனை படைத்து வரும் சிறந்த தொழில் முனைவர் த.ஜெபி ஜெனார்த், இலக்கிய துறை சார்ந்து திருமதி.ஜாயிதா ஜலால்தீன், ஊடக துறை சார்ந்து எஸ்.தவபாலரெட்ணம், உ.உதயகாந்த் (JP), சமூக சேவை துறை சார்ந்து எஸ்.ரமணதாஸ், எஸ்.கமலேஸ்வரராஜா, கே.குணநாயகம், எஸ்.சரவணபவன், இரும்பரசன் இராஜரெட்ணம், தரணீஸ்வரம் ஆகியோர் விருதினைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.