மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுவூட்டும் நிகழ்வு.







 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுவூட்டும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இலுப்படிச்சேனை அக்ஷ்ன் லங்கா சென்டர் (Action Lanka centre) வளாகத்திலல் இடம் பெற்றது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே .தனபாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் நிரோஜன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை பலப்படுத்துவதற்கு தெரிவு செய்யப்பட்ட ஆறு பாடசாலைகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர்களுக்கு இரு நாள் பயிலுனருக்கான பயிற்சியாளர் பாசறை நடைபெற்றன.
மட்/காயங்குடா கண்ணகி வித்தியாலயம், மட்/பங்குடாவழி வித்தியாலயம், இலுப்படிச்சேனை அம்பாள் வித்யாலயம் மற்றும் கிருஷ்ணா வித்யாலயம், பெரிய புல்லுமலை ஆர்.சி.டி.எம்.எஸ் கரடியனாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் பங்குபற்றியிருந்தது.
இதன் போது சிறுவர் பாதுகாப்பு, சிறுவர்களின் உளநல மேம்பாடு, முறையற்ற சமூக வலைத்தள பாவனை, சமூக விழிப்புணர்வுடன் செயல்படுதல், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.
மேலும் சிறுவர் பாதுகாப்பு குழுக்கள் பாடசாலைகளில் செயற்ப்பட்டு பாடசாலைகளில் அடையாளம் காணப்படுகின்ற சிறுவர் சார்ந்த பிரச்சினைகளை பாடசாலை மட்டத்திலேயே தீர்த்துக் கொள்வது இக்குழுக்களின் முக்கிய நோக்கமாக காணப்படுகின்றது.
பாடசாலை மட்டத்தில் தீர்த்துக் கொள்ள முடியாத விடயங்களை பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் வழிகாட்டுதலின் கீழ் உரிய முற்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சட்டம் சார்ந்த விடயங்களையும் முன்னெடுப்பதற்காக இக்குழுக்கள் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலைய உயர் அதிகாரிகள், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் அ.பிரபாகர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் திருமதி நிஷா ரியாஸ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரி சியாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.