சவால்களை முறியடித்து அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும் என அம்பாரை மாவட்ட தமிழரசுகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபைகளில் போட்டியிடும்; கட்சி சார்பாக அதிகாரமளிக்கப்பட்ட
முகவர்களுக்கான கடிதங்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று(13) கையளித்த
பின்னர் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
இக்கடிதங்களை கையளிப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்
மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தமிழ்
அரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான ஏ.தர்மதாசா க.கிருஸ்ணமூர்த்தி ஆகியோர்
சென்றிருந்தனர்.
மாவட்ட செயலகத்திற்கு சென்ற அவர்கள் அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம அவர்களையும் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடினர்.
இதன் பின்னர் கட்சி சார்பாக அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுக்கான
கடிதங்களை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கும்போது
பொத்துவில் திருக்கோவில் ஆலையடிவேம்பு சம்மாந்துறை நாவிதன்வெளி போன்ற
பிரதேச சபைகளுக்கான அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் கடிதங்களை கையளித்தோம்.
நாளை கட்டுப்பணத்தையும் செலுத்துவோம்.
எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தல் சவால்மிக்கதாக அமையும். ஆயினும்
எமது கட்சி மிகச்சிறந்த சமூக சேவையுடைய கல்வியறிவுடைய மக்கள் மத்தியில்
செல்வாக்குள்ள சமூகத்தின் நற்பிரஜைகளை களம் இறக்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ் மக்கள் தழிழோடும் தேசியத்தோடும் பயணிப்பார்கள் எனவும்
அதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்குவார்கள் எனும் நம்பிக்கையும்
எமக்குள்ளது. ஆகவே தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் கட்சியோடு அம்பாரை
மாவட்ட மக்கள் எப்போதும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மக்கள் தெரிவு செய்யும் வேட்பாளர்களையே களம் இறக்கியுள்ளோம். இதன் அடிப்படையில் வரும் சவால்களை முறியடித்து வெற்றி பெறுவோம் என்றார்.