பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாகிறது .

 


இந்த ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாவதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் கடந்த 14ஆம் திகதி முடிவடைந்தது.

எவ்வாறாயினும், ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதற்கிடையில், இந்த நாட்களில் குழந்தைகளிடையே சின்னம்மை நோய் பரவுவது குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு சுகாதாரத் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

குழந்தை நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிடுகையில், 

அத்தகைய நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இருந்தால், அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த நாட்களில் நிலவும் அதிக வெப்பநிலையுடன், தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியம் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலையினால் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துமாறும், சரியான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் 

மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும். 

அதற்கமைய, குறித்த பகுதிகளில் 39 பாகை செல்சியஸ் முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனால், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் லேசான ஆடைகளை அணியுமாறும், நிழலான பகுதிகளில் ஓய்வெடுத்தல் மற்றும் போதியளவு நீரை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.