கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, வௌ்ளிக்கிழமை (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு பயணியை கைது செய்தனர்.
அவர் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த 32 வயதுடையவர்.பல மத்திய கிழக்கு நாடுகளில் ஹோட்டல் ஊழியராக முன்னர் பணியாற்றி வந்தார், இப்போது சுங்க அதிகாரிகளால் இந்த முறையில் பல்வேறு பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வரும் ஒரு கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வௌ்ளிக்கிழமை (04) காலை 06.30 மணிக்கு வந்திருந்தார்.
அவர் கொண்டு வந்த 03 சூட்கேஸ்களில் இந்த 528 கையடக்க தொலைபேசிகள் மட்டுமே பேக் செய்திருந்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட அலைபேசிகளில், ஆப்பிள் ஐபோன்கள், சாம்சங், கூகிள் பிக்சல்கள் மற்றும் ரெட்மி போன்கள் அடங்கும், அவற்றில் ஒன்று 500,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ளதாகும்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இந்தப் பயணியைக் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.