வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று தீர்ப்புக்காக ஒத்திவைப்பட்டுள்ளது. கடந்த 2023 ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையானது கட்டளைக்கு 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றைய வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆஜராகி வழக்காடியிருந்தார். இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனால் சமர்ப்பணம் முன்வைக்கப்பட்டது. அவரது சமர்ப்பணத்தின் போது குறித்த வழக்கானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருகை தந்த போது அதற்கு எதிராக போராட்டம் நடாத்தியதாக வழக்கு பொலிஸாரினால் ஏறாவூர் நீதிமன்றில் 36 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட போது நீதிமன்ற நீதிபதியினால் முறையான ஆதாரங்கள் வழங்காமல் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு மீண்டும் அதே தகவலுடன் பொலிஸாரினால் புதிய வழக்கு 30 பேருக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள், போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களும் இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் நீதிபதி அவர்கள் இடமாற்றத்தினால் சென்ற நிலையில் அவரின் கட்டளையொன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிரகாரம் குற்றப்பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு நடாத்தப்படுகின்றது. தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ் மக்கள் போக்குவரத்தை தடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டே முன்வைக்க்பபட்டுள்ளது. முன்பின் முரணான இரண்டு நீதிமன்ற கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இரண்டாவது கட்டளை முதலாவது கட்டளை இருப்பதை மறந்து சட்டத்தின் முதலாவது கட்டளை கவனத்தில் கொள்ளப்படாமல் இந்த இரண்டாவது கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. இதே நீதிமன்றம் இதனை மாற்றமுடியும்.வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வீதியை போராட்டக்காரர்கள் மறித்தார்கள் என்பது ஒரு சிறுவிடயம். இந்த நாட்டில் நடக்கின்ற விடயம். சட்டம் சிறுசிறு விடயங்களை கவனத்தில்கொள்ளாது. சிறிய விடயத்திற்கு வழக்கு தாக்கல் செய்து அனைவரது நேரத்தினையும் வீணடித்து எல்லாவற்றுக்கும் மேலாக நீதிமன்றத்தின் நேரத்தினையும் வீணடித்து இந்த வழக்கினை தாக்கல் செய்யப்பட்டுள்ளதனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யவேண்டும்.
வீதியை மறித்து போராட்டம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு விநோதமான குற்றச்சாட்டு. ஏனென்றால் ரணில் விக்ரமசிங்க இங்கு வரும் போது தான் அப்படி செய்தார்கள் என்று சொல்லப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக வந்தது தலைநகரில் பல இடங்களில் வீதியை மறித்து போராட்டம் நடாத்தியதானால் தான். எனவே புதிய புதிய சிந்தனையில் விநோதமான வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தினை வீணாக்கக் கூடாது என்ற சமர்ப்பணத்தினை முன்வைத்தார். சமர்ப்பணங்களை செவிமடுத்த நீதிவான் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி கட்டளைக்காக வழக்கினை ஒத்திவைத்தார்.