அம்பாறை
மாவட்டத்தில் பொத்துவில் கோமாரிப் பகுதியில் வனபரிபாலன திணைக்களம்
விவசாயிகளின் காணியில் அடையாள எல்லைக் கற்களை போட்டதை எதிர்த்து
விவசாயிகள் இன்று (7) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோமாரி
கழுகொல்ல வட்டியகாடு என்னும் பிரதேச விவசாயிகள் தமது காணியில் சேனைப்
பயிர்ச் செய்கை மற்றும் விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்தார்கள்.
குறித்த காணிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வனபரிபாலன திணைக்களம் அடையாள கற்களை நட்டு எல்லை படுத்தியது .
இதனை
தொடர்ந்து பொதுமக்கள் இது எமது பெர்மிட் காணி. காலாகாலமாக நாங்கள் இதிலே
சேனைப் பயிர்ச் செய்கை செய்து வருகிறோம் .இதை விட வேண்டும் என்று
கேட்டதற்கு இது எமக்குரிய கட்டளை நாங்கள் அதற்கான அடையாளக்கல்லை
இட்டிருக்கின்றோம் என்று பதிலளித்தனர்.
அதனையடுத்து
இன்று திங்கட்கிழமை விவசாயிகளும் பொதுமக்களும் சேர்ந்து கலுகொல்ல
எனுமிடத்தில் வன பரிபாலன திணைக்களத்தின் செயற்பாட்டுக்கு எதிராக மாபெரும்
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அதன் போது பலவித சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கி நின்றனர்.
( வி.ரி. சகாதேவராஜா)