கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி -01ம் வட்டாரத்தில் வடிகான் மூடிகள் இடப்படாமல் திறந்த நிலையில் நீரோட்டமில்லாமல் கழிவுநீர் தேங்கி அசுத்தமான வடிகானால் பிரதேச மக்கள் பெரும் அசெளகரியங்களுக்குள்ளாவதுடன், பொதுமக்கள் விசனம் தெரிவித்து, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஓட்டமாவடி 01ம் வட்டாரத்தில் ஜும்ஆப்பள்ளிவாயல், தனியார் கல்வி நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் என அதிக சன நடமாட்டமுள்ள பிரதேசத்தில் இவ்வடிகான் காணப்படுவதுடன், குப்பை, கூழங்கள் கழிவுநீர் தேங்கி துர்வாடை வீசுவதுடன், உயிராபத்துக்களை உண்டாக்கிய நுளம்புகள் பெருக்கமடைந்தும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக நுளம்பினால் பரவக்கூடிய நோய்கள் இப்பிரதேசத்தில் உருவாகும் நிலையும் காணப்படுகின்றது.
ஆகவே, குறிப்பிட்ட வடிகான் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வடிகானில் உள்ள கழிவுகளை அகற்றி நீர் வழிந்தோடுவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் இதனால் ஏற்பட்டுள்ள சுகாதாரச்சீர்கேடுகளைச் சீர்மைப்பதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி மூவ் கல்குடா டைவர்ஸ் அனரத்த அவசர சேவையினால் பிரதேச சபை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச செயலகம் போன்றவற்றுக்கும் இன்று (04/04/2025) மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.