கல்குடாவுக்கான தீயணைப்பு வாகனம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்.







கல்குடா பிரதேசத்தின் நீண்டகால, அத்தியாவசியத் தேவையாகக் காணப்படும் தீயணைப்பு வாகனத்தினை இயங்கு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பிலான விஷேடகலந்துரையாடல் இன்று 2025.04.01ம் திகதி  
முற்பகல் 10:00 மணிக்கு கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று, பிரதேச சபையின் செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்கீதன் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.முபாறக், செயலாளர் ஏ.எல்.சதாம், காரியாலயப்பொறுப்பாளர் ஏ.ஏ.எம். அஹமட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவை, கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபையுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வந்த நிலையில், குறித்த சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது தற்காலிகமாக தயார்படுத்தப்பட்டுள்ள  வாகனத்தினை பழுதுபார்த்தல், குறித்த தீயணைப்பு வண்டிக்குத்தேவையான அத்தியாவசிய உபகரணங்களைக் கொள்வனவு செய்தல், தீ விபத்துக்கள் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபை மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவையின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தல், பிரதேச சபையின் அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்கள், அனர்த்த அவசரக் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகளை உள்ளடக்கிய தீயணைப்பு அணியினருக்கு பயிற்சியளித்தல் போன்ற தீர்மானங்கள் எட்டப்பட்டன.

இப்பிரதேசத்தில் அடிக்கடி இடம்பெறும் தீ ஆபத்துக்களை எதிர்கொள்ளப்போதுமான தீயணைப்பு இயந்திர வசதிகள் இல்லாத காரணத்தினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்தழிவுகள் இடம்பெற்றுள்ளன.  

அவசரத்தேவைகளின் போது சுமார் 32 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மட்டக்களப்பு மா நகர சபையின் தீயணைப்பு வாகனத்தின் உதவியையே பெற வேண்டிய நிலையில், அவ்வாகனத்தின் உதவி கிடைக்கின்ற போது தீ வேகமாகப்பரவி இழப்புக்கள், சேதங்கள் ஏற்பட்டு விடுகின்றன.